இந்தியா முழுவதும் காடுகளில் வாழ்கிற பழங்குடியின மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பழங்குடியின மக்கள் பட்டா நிலங்களில் வாழவில்லை என கூறி அவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. பிப்ரவரி 13-ம் தேதி இந்தியா முழுவதும் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பழங்குடி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இதில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பழங்குடியின மக்கள் தங்கள் வாழும் இடங்களில் இருந்து காலி செய்ய வேண்டும் என்ற பழைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.