செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தொடர்ச்சியாக மனு கொடுத்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு, கடந்த 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சம்பந்தமாக இன்னொரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை ஒராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று (30-09-24) நடைபெற்றது. அப்போது நீதிபதி, ‘ எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணிச் சுமை அதிகமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா?. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு விசாரணையை விரைவாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழக அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் எத்தனை பேர் மீது எத்தனை வழக்குகள் நிலுவைகள் உள்ளன? என்ற விவரங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ தெரிவித்துள்ளார்.