இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரத்தில் இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது. இதுவரை மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 40 க்கும் மேற்பட்டோருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா ப்ளஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர்களில் மத்திய பிரதேசத்தில் இரண்டு பேரும், மஹாராஷ்ட்ராவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்தநிலையில் சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக் கன்சோர்டியா (INSACOG) குழு நிபுணர்களின் வாராந்திர ஆய்வு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் டெல்டா ப்ளஸ் கரோனாவின் நிலை, அதன் பரவல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக் கன்சோர்டியா என்பது கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறையை கண்டறியும் ஆய்வகங்களின் கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பு நாட்டில் பரவும் வைரஸ்கள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.