டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பலமுறை மனு செய்தும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டில் அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நிரந்தரமாக சிறை கம்பிகளுக்கு பின்னால் வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் உடனடியாக அதன் மீதான விவாதம் தொடங்கப்பட வேண்டும். இதுவரை இந்த வழக்கில் வாதம் தொடங்காதது ஏன்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயிடம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.