உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பட்டாசு சந்தையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ராதாகோபால் பாக் பகுதியில் உள்ள மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பட்டாசு சந்தையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 15 பட்டாசுக் கடைகளும், 82 இரு சக்கர வாகனங்களும் தேசமடைந்துள்ளதாகவும், தீ விபத்தில் சிக்கி 15 பேர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.