மேற்குவங்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டுக்கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் வழக்கமாக போட்டியிடும் தொகுதியான பவானிபூரை விடுத்து நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா, தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தல் முடிவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் மம்தா தெரிவித்திருந்தார்.
தேர்தலில் தோல்வியடைந்தாலும், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டு ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றால், பதவியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்பதால் மம்தா முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் பவானிப்பூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற சோவண்டேப் சாட்டர்ஜி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக தான் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோவண்டேப் சாட்டர்ஜி, "முதல்வர் பவானிபூரிலிருந்து இரண்டு முறை வென்றுள்ளார். கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்தாலோசித்தனர். அவர் பவானிபூரிலிருந்து போட்டியிட விரும்புவதாக தெரிந்தபோது, ராஜினாமா செய்ய விரும்பினேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசாங்கத்தை நடத்த வேறு யாருக்கும் தைரியம் இல்லை. நான் அவரிடம் பேசினேன். இது அவருடைய சீட் (தொகுதி). நான் அதை பாதுகாத்தே வந்தேன்" என கூறியுள்ளார்.பவானிபூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததையடுத்து, மம்தா தனது பழைய தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.