கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வால்கர் அரசியல் சாசனத்தை ஆதரிக்காமல், 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைப்பை நடத்தி வந்தார். மகாத்மா காந்தி படுகொலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர் என கூறினாலும் அவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். கோல்வால்கரும், சாவர்க்கரும் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஆவணத்தை தீவிரமாக எதிர்த்தனர். இருவரும் அரசியலமைப்பை எதிர்த்தார்கள், நீங்கள் அனைவரும் அவற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு முன்னதாக காந்தி ஜெயந்தி நாளின் போது, காங்கிரஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில் அவர், “சாவர்க்கர் ஒரு பிராமணர். ஆனால் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார். அசைவ உணவு உண்பவராக இருந்தார். அவர் பசுவதையை எதிர்க்கவில்லை. உண்மையை சொல்லப்போனால், இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்தார். சாவர்க்கரின் கருத்துக்கள், மகாத்மா காந்தியின் கருத்துக்களோடு முரண்படுகிறது. சாவர்க்கரின் சித்தாந்தம் அடிப்படைவாதத்தை நோக்கி சாய்ந்துள்ளது” என்று பேசினார். இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சாவர்க்கர் குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய் விஜேயந்திர, ‘சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய மூடா ஊழல் வழக்கில் இருந்து கவனத்தை திசை திருப்பவே சாவர்க்கரை பற்றி காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டுகிறது’ என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.