சத்தீஸ்கர் மாநீலம் பலோதா பஜார் மாவட்டத்தில் சத்னாமி சமூகத்தின் மத வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்தியதாகக் கூறியும், இதற்கு சிபிஐ விசாரணை கோரியும் இன்று(10.06.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது கல் வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன.
பலோதா பஜாரில் நடந்த வன்முறை குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் கூறுகையில், “அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் அது கட்டுப்பாடில்லாமல் போனது. போதிய போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான்கு இடங்களில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன, ஆனால் அவர்கள் மற்றொரு வழியாக வந்து தடுப்புகளை உடைத்தனர். அவர்கள் காவல்துறையினரைத் தாக்கினர் மற்றும் கற்களை வீசினர். இதனால் காவலர்கள் பலர் காயமடைந்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பலோடா பஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத சூழ்நிலை காரணமாக போலீஸ் ஐஜி மற்றும் கமிஷனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி வரவழைக்கப்பட்டு, சம்பவம் குறித்து முதற்கட்ட தகவல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிரோத்புரியின் அமர் குஃபா வழக்கில் நீதி விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் விஜய் சர்மா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்தை கெடுப்பவர்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.