ராஜஸ்தான் மாநிலம், தித்வானா பகுதியில் குச்சமான் பகுதியில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு, சில பள்ளி மாணவிகள் தங்கள் செல்போன் எண்ணுக்கு ரீஜார்ஜ் செய்ய சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர், அந்த மாணவிகளிடம் தவறாக பேசி, ‘முதலில் ஐ லவ் யூ சொல்லுங்கள், அதன் பிறகு ரீஜார்ஜ் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு கோபமடைந்த பள்ளி மாணவிகள், அந்த கடைக்காரரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து அடிக்க தொடங்கினர். பள்ளி மாணவிகள், கடைக்காரை சரமாரியாக அறைவதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அங்கு திரண்டனர். அதன் பின்னர், அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் கடைக்காரரை வழியில் திட்டிக்கொண்டே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்காரரை, பள்ளி மாணவிகள் அடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.