இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பைரன்சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில், பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது, ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது.
மைத்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு பலன்கள் குறைவதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்படும் என பழங்குடியின மக்கள் கவலை தெரிவித்தனர். இதனால், இதற்கு பழங்குடி சமூகமாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியினர், கடந்த மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நிலைமை மோசமானதையடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இணைய சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை உணர்ந்த மக்கள், குடும்பத்தோடு அகதிகளாக மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்து வருகின்றனர். இதனால், பாஜக அலுவலகங்களும் பாஜக அமைச்சரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன. பாஜகவினர் நடமாடுவதற்கு அச்சப்படும் பகுதியாக மணிப்பூர் மாறி வருகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீவைக்கப்பட்டது. அதேபோல் மணிப்பூர் அரசின் ஒரே பெண் அமைச்சரான நெம்சா கிப்ஜென்னின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'மணிப்பூரில் தனி நிர்வாகம் நடத்துவதை எதிர்ப்பதாகவும், அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என வலியுறுத்தி பத்து எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூர் மாநில எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குழுவினரிடம் இருந்து உடனடியாக ஆயுதங்கள் அனைத்தையும் பெற வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். கூடுமான அளவு அவர் நேரில் சென்று மக்களிடம் அமைதியாக இருங்கள் என்ற வலியுறுத்தலையாவது கொடுக்க வேண்டும்.
150 உயிர்கள் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 5000 க்கும் மேற்பட்டோரின் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். கோவில்கள், சர்ச்சைகள் என வழிபாட்டுத் தலங்கள் கொளுத்தப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சர் அங்கு சென்று சில அரசியல் கட்சிகளிடம் மட்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் இந்த ஆலோசனையை விரிவாக்கும் வகையில் மணிப்பூரில் தனி நிர்வாகம் நடத்துவதை நிறுத்திவிட்டு அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.