நான்கு வயது மகனை பெற்ற தாயே கொலை செய்து சூட்கேஸில் வைத்து உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், கொல்கத்தாவில் முதுகலை படிப்பை தொடர்ந்ததோடு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றி வந்தார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றவர் .
பெங்களூருவில் ஏஐ லேப் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். கடந்த ஆறாம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தன்னுடைய நான்கு வயது மகனுடன் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார் சுசனா சேத். இந்நிலையில் நேற்று ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு அவசரமாக பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை பராமரிப்பு செய்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஹோட்டல் அறைக்கு வரும் பொழுது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும்போது தனியாக சென்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திலும் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஹோட்டலில் இருந்து கிளம்பிய சுசனா சேத்தை செயலி மூலம் பின் தொடர்ந்தனர். அதேபோல் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஹோட்டலுக்கு மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும் பொழுது தனியாக சென்றது உறுதியானது.
மேலும் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, சுசனா சேத் பெங்களூர் செல்ல ஒரு வாடகை கார் வேண்டும் என ஹோட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு விமான டிக்கெட் மிகவும் குறைவு தான் எனவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் ஹோட்டல் ஊழியர்கள். ஆனால் நான் காரில் தான் பயணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார் சுசனா சேத். அதன்படி வாடகை காரில் கையில் தூக்க முடியாமல் சூட்கேஸ் ஒன்றை சுசனா சேத் எடுத்து சென்றுள்ளார்.
உடனடியாக அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் உங்களுடைய மகன் எங்கே விசாரித்தனர். அதற்கு சுசனா சேத் மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக தெரிவித்து ஒரு முகவரியை சொல்லியுள்ளார். முகவரியை சென்று பார்த்த பொழுது அது போலி முகவரி என்று தெரியவந்தது. இதனால் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் செல்போன் மூலம் ட்ராக் செய்ததில் கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து காரின் டிரைவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு செல்போன் மூலமே போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கார் சென்றது. காரை சோதனை செய்தபோது காரில் இருந்த பெரிய சூட்கேஸில் சுசனா சேத்துவின் மகன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே தன்னுடைய மகனை கொன்று விட்டு உடலை சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.