Skip to main content

“மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கத் தயார்’ - மத்திய அமைச்சர் அமித்ஷா 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Ready to discuss Manipur issue  Union Minister Amit Shah

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில்,  எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் இது குறித்து தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடரின் இரண்டாம் நாளும் இதே நிலைமை நீடித்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

 

இதன் பின்னர் மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும், இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் முதலில் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. மக்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் கொடூரச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து இரு அவைகளிலும் அமளி நீடித்ததால் மதியம் 2.30 மணி வரை மக்களவையும், மதியம் 3 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். முக்கிய பிரச்சனைகளில் உண்மை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியவேண்டும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் மக்களவையில் அமளி நீடித்ததால் மக்களவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார். அதே போன்று மாநிலங்ளவையும் மீண்டும் 3 மணிக்குக் கூடியபோது தொடர்ந்து அமளி நீடித்ததால் மாநிலங்களைவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் அவைத்தலைவர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தீர்மானம் நிறைவேற்றி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்