மக்களவை எதிர்கட்சித் தலைவரும், ரேபரேலி மக்களவை எம்.பியுமான ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். அங்கு பேசிய அவர், “இந்தியா, அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும். ஆனால், இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகத் தலைவரின் பட்டியலைப் பார்க்க வேண்டும். அதில், பட்டியலினத்தவர்களைச் சேர்ந்தவர்களையோ, பிற்படுத்தப்பட்டவர்களின் பெயர்களையோ காட்டுங்கள். முதல் 200 பேரில், ஒரு பிற்படுத்தவர் இருப்பதாக நினைக்கிறேன். 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வெளிநாட்டில் இருந்தபோது, இந்தியாவில் இடஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக ராகுல் காந்தி கூறினார். இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஒருபுறம், மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன, அங்கு ராகுல் காந்தி நாட்டில் இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை செய்கிறார்.
இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன். ராகுல் காந்தி அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி, பா.ஜ.க அதை மாற்றும் என்று பொய்யான செய்தியை பரப்பினார். ஆனால், நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டது காங்கிரஸ் தான்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, சஞ்சய் கெய்க்வாட் மீது புல்தானா நகர போலீசார், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.