
மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில முன்னால் ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். இவர் ‘கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை பின்பற்றுதல்’ என்கிற சுயசரிசதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
இதில் நஜ்மா ஹெப்துல்லா கூறியிருப்பதாவது, “கடந்த 1999ல், பல்வேறு நாடுகளின் பாராளுமன்றகளுக்கு இடையேயான சர்வதேச அமைப்பின் (ஐபியு) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த சமயத்தில் பெர்லினில் இருந்ததால், இந்த விஷயத்தை முதலில், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்து தெரிவித்தேன். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவர், ‘இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள். அதுவும் ஒரு இந்திய முஸ்லீம் பெண்ணுக்கு உங்களுக்கு கிடைத்த பதவி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள், நாம் கொண்டாடுவோம்’ என்றார்.
அடுத்ததாக துணை ஜனாதிபதியிடம் விஷயத்தை சொன்னேன். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தேன். அவரது ஊழியர் ஒருவர் முதலில், ‘மேடம் பிஸியாக இருக்கிறார்’ என்று கூறினார். நான் பெர்லினில் இருந்து அழைக்கிறேன் என்று கூறியபோதும், அவர், ‘தயவுசெய்து லைனில் காத்திருங்கள்’ என்றார். ஒரு மணி நேரம் நான் போனில் காத்திருந்தேன். சோனியா காந்தி என்னிடம் பேசவே இல்லை
அந்த அழைப்பிற்குப் பிறகு, நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. இது எனக்கு ஒரு நிராகரிப்பு உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த ஆண்டு, நியூயார்க்கில் நடந்த மிலேனியம் மாநாட்டில் கலந்துகொள்ள சோனியா காந்தியை நான் அழைத்தேன். ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் வர முடியாது என்று கூறிவிட்டார். 1998ஆம் ஆண்டில் சோனியா காந்தி தலைவரான பிறகு, கட்சித் தலைமையுடனான நேரடி தொடர்பு துண்டிக்கப்பட்டது. கட்சிக்காரர்கள், பணிபுரியும் குமாஸ்தாக்கள் மற்றும் பிற ஊழியர்கள் என கட்சிக்காக அனைத்தையும் அர்ப்பணித்தவர்கல் புறக்கணிக்கப்பட்டனர்.
இளம் நிர்வாகிகள், கட்சி தலைமையுடன் பேச முடியாமல் தடுத்தனர். காங்கிரஸைப் பின்பற்றுபவர்கள் என்ற முறையில், எங்கள் தலைவரிடம் கருத்துத் தெரிவிப்பதில் எங்களுக்கு முக்கியப் பங்கு இல்லாமல் போனது. எங்கள் பரிமாற்றங்களின் தரம், எங்கள் தலைவரின் குழுக்கள், எங்கள் தலைவரின் பார்வையை எவ்வாறு ஆதரிப்பது என்பது பற்றிய புரிதல் குறைவாக இருந்தது. அப்போதுதான் சரிவு தொடங்கியது. பல தசாப்தங்களாக காங்கிரஸில் உருவான சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒத்துழைப்புக் கொள்கைகளுக்கு எதிராக எங்கள் தலைவரின் நடத்தை இருந்தது .இந்திரா காந்தி தனது இல்லத்தை திறந்த புத்தகமாக வைத்திருந்தார். ஆனால், சோனியா காந்தி வந்த பிறகு தகவல் தொடர்பில் முந்தைய காங்கிரஸ் கலாச்சாரம் முற்றிலும் மாறிப்போனது” என்று தெரிவித்துள்ளார்.