நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனிடையே, பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வந்தனர். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு இந்தியா கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவேன் என்றும் கூறினார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, கடந்த மாதம் 28ஆம் தேதி காலை தனது பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மூன்று மாநில முதலமைச்சர்களின் இந்த திடீர் அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணியே இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இந்தியா கூட்டணியை உருவாக்கியபோது அது பிறந்தவுடன் சில நோய்களால் பாதிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரித்து ஐ.சி.யூ மற்றும் வெண்டிலேட்டரில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், பாட்னாவில் அந்த கூட்டணிக்கு நிதிஷ்குமார் இறுதிச் சடங்கு செய்துவிட்டார். எனவே, இனி அந்த கூட்டணி இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.