நாடு முழுவதும் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவு வைப்பு தொகை வங்கிகளில் உரிமை கோர ஆளில்லாமல் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று பேசிய அவர், "2018 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் உள்ள வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ரூ.14,578 கோடி மதிப்பிலான டெபாசிட்கள் உள்ளன. இது கடந்த 2017 ஆம் ஆண்டின் கணக்கை விட 3000 கோடி ரூபாய் அதிகமாகும். இதில் எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.2,156 கோடி டெபாசிட்டும், வாழ்நாள் காப்பீட்டுப் பிரிவில் ரூ.16,887 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது.
மேலும் கடந்த ஒரு ஆண்டில் வாங்கி மோசடிகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான முத்ரா கடன் திட்டத்தில் கடந்த ஜூன் 21-ம் தேதி வரை ரூ.19 கோடிக்கும் மேலான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,313 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. மோசடி சம்பவங்களை பொறுத்தவரை தமிழகத்தில் அதிக அளவு மோசடி நடந்துள்ளது. 344 மோசடி புகார்களுடன் இந்த பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சண்டிகர் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் உள்ளன.