ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் தொடர்பான போதைப்பொருள் விவகார வழக்கை சரியாக விசாரிக்காத போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும், அவரது நண்பர்களும் கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டனர். மும்பை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அப்போது பணியாற்றிய சமீர் வான்கடே இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானை மிரட்டிப் பணம் கேட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அப்பொறுப்பிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். அண்மையில் இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்குழு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன்கான் உட்பட ஆறு பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதையடுத்து, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லாததால் ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த சமீர் வான்கடே, சரியாக விசாரிக்காத காரணத்தால்தான் ஆர்யன்கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது.இந்த நிலையில், சமீர் வான்கடே வருவாய் புலனாய்வு பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.