கேரளாவில் தாய் யானையை பிரிந்து 13 நாட்களாக தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனை கண்ட வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை மீட்டு உணவளித்து அதனை பராமரித்து வந்தனர். தாய் யானையுடன் குட்டியை சேர்த்து வைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த யானை குட்டிக்கு 'கிருஷ்ணா' என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியவில்லை. தாய் யானையும் குட்டி யானையை தேடி வரவில்லை.
பிற யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்து வைத்தாலும் தாயை பிரிந்த அந்த யானை, கூட்டத்தில் இருந்து மீண்டும் பிரிந்து வந்தது. இதனால் குட்டி யானையின் உடல்நலம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து குட்டி யானை கிருஷ்ணாவிற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் தொடர்ந்து உடல்நலக்குறைவில் இருந்த கிருஷ்ணா குட்டி யானை 13வது நாளில் இறந்து போனது. இந்தச் சம்பவம் கேரள வனத்துறையினருக்கும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.