
டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இன்று காலை முதல் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வந்தாலும், பல நகரங்களில் கரோனா அச்சம் காரணமாக விமான பயணத்திற்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் இந்த விமானப்பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆரோக்கிய சேது செயலி, கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல விதிமுறைகளை அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரும் விமானப் பயணிகள் 7 நாட்கள் நிர்வாகத் தனிமையிலும், பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமையிலும் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், இன்று காலை விமான நிலையத்தில் வந்திறங்கிய சதானந்த கவுடா, அரசின் விதிகளை பின்பற்றாமல் நேராக தனது வாகனத்தில் ஏறி சென்றார். மக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்ற கட்டாயப்படுத்தப்படும் சூழலில் மத்திய அமைச்சர் ஒருவர் விதிகளை மதிக்காமல் சென்ற இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள சதானந்த கவுடா, "நடைமுறையில், அரசு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சில நபர்கள், குறிப்பாக பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உண்டு.
எனவே, நான் ஒரு அமைச்சர், நான் மருந்தக அமைச்சகத்தை கவனித்துக்கொள்கிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் போதுமான அளவு மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். மருந்து வழங்கல் முறையாக செய்யப்படாவிட்டால், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்? மருந்துகள் வழங்கப்படுவது அரசாங்கத்தால் முறையாக செய்யப்படாவிட்டால், அது அரசாங்கத்தின் தோல்வி அல்லவா? நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், இதையெல்லாம் யார் உறுதி செய்வார்கள்? எனவே, என்னை மற்ற நபர்களுடன் ஒப்பிட முடியாது" என தெரிவித்துள்ளார்.