உலக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களை இயக்கி வருகிறது. அதிலும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும்.
வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு தனியுரிமை கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த புது மாற்றத்தால், வாட்ஸ் அப் பயனாளர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள், மற்ற மெட்டா சமுக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில், இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில், வாட்ஸ் அப் பயனாளர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு மற்ற மெட்டா ஊடகங்களுக்கு பகிரப்பட்டு வருவதை உறுதி செய்தது. இந்த நிலையில், வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், விளம்பர நோக்கங்களுக்காக மெட்டாவுக்குச் சொந்தமான பிற பயன்பாடுகளுடன் பயனர் தரவைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது.