மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நாளை (20-11-24) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என மகா விகாஸ் அகாடி கூட்டணியும், மகா யுதி கூட்டணியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நேற்று(18-11-24) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் அனில் தேஷ்முக். சரத் பவார் தலைமையிலான சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கே கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றதையடுத்து, அனில் தேஷ்முக் தனது காரில் கடோல் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பெல்பாட்டா அருகே வந்த போது, அனில் தேஷ்முக்கின் கார் மீது மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கல்வீச்சு தாக்குதலில், அனில் தேஷ்முக்கின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகே இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் நாளை நாளை நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.