நம் மண்ணின் கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதும், வீர விளையாட்டுக்களை கற்பதும் கற்பிப்பதும் இன்றைய காலத்தில் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த தேவையையும் அவசியத்தையும் உணர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்து மாநில அளவில் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற உந்து சக்தியாக இருக்கிறார் கோகுலகிருஷ்ணன். இவர் மீள்கழனி சிலம்ப பயிற்சி அகாடமியினை கோவையில் நடத்தி வருகிறார்.
பொறியியல் பட்டதாரியான கோகுலகிருஷ்ணன், குரூப் 1 போட்டித் தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறவர். வீர விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்ட இவர் நம் மண்ணின் கலைகளை ஆரம்பத்தில் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார், அதை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முனைந்தார். இவரது ஆர்வத்தைக் கண்ட அந்த பகுதி மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்கி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிலம்ப பயிற்சியினை அளித்து வருகிறார்.
சிலம்ப பயிற்சி என்பது வெறும் தற்காப்பு கலை மட்டுமல்ல, இதைக் கற்றுக்கொள்கிற குழந்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மேம்பட்டு வளர்ந்து வரும், இதன் மூலம் தங்களது படிப்பிலும் சிறந்தவர்களாக வல்லவர்களாக வருவார்கள். ஆண்டிராய்டு போன் போன்ற கேட்ஜெட்டுக்களுக்கு அடிமையாகிற குழந்தைகளை சிலம்பம் போன்ற வீரக்கலைகளை கற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் அவர்கள் உடல் உறுதி மிக்கவர்களாக மாறுவார்கள் என்பதற்காகவே இதனை செய்துவருவதாக சொல்கிறார் பட்டதாரி இளைஞரான கோகுலகிருஷ்ணன். சமீபத்தில் இவரிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள் கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாரிக் குவித்து உள்ளனர்.