Skip to main content

பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Rs. 20 lakhs for information about 3 illegal people at pahalgam incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலின் போது, காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதற்கு இந்தியத் தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு தலைவர்கள் முதற்கொண்டு கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை கண்டறிந்து அவர்களை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். 

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்து வந்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் உருவாகும் அபாயம் இருந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் உள்ளிட்ட முப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது. இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது. 

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பான சுவரொட்டிகள் தெற்கு காஷ்மீரில் உள்ள பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய அந்த சுவரொட்டியில், சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல்களை தருபவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்