முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவுக்கு திரும்புவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதற்காக அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்கு பதியும் சில மணி நேரத்துக்கு முன்பு அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றது மிகவும் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசிடம் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கடிதம் ஒன்றைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.