பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கை விசாரித்த குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில், கிழக்கு கடற்கரை சாலை இந்திரா காந்தி சிலை அருகே 5 சாலைகளையும் மறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. சுவாதி சிங் தலைமையிலான போலீசார் 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இதனிடையே இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து மங்களூர் புறப்படத் தயாராக இருந்த ரயிலை மறித்து இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். மறியல் செய்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் 10 நிமிடம் தாமதமாக மங்களூர் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.