அயோத்தியில் சர்ச்சைகுரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்யும் வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்க முன்பு அமைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.ஏ பாப்டே, யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த அமர்வு வழக்கை இன்று விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிபதி யு.யு. லலித் அயோத்தி தொடர்பான மற்றொரு வழக்கில் முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக வாதாடியதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் அமர்விலிருந்து விலகுவதாக நீதிபதி யு.யு.லலித் கூறினார். இதனையடுத்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்பதால் வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்தனர்.