
மேகலாயா மாநிலம், மேற்கு கரோ ஹல்ஸில் மாவட்டத்தில் தாதெங்க்ரே பகுதி ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில், 20 வயதுமிக்க பெண் ஒருவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த உறவினர்கள், அந்தப் பெண்ணை பொதுவெளியில் அழைத்துவந்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் பொதுவெளியில் வைத்துக் கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோ வைரலான சில மணி நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இளம்பெண்ணைத் தாக்கிய 6 பேரை கைது செய்தனர்.
இதனிடையே, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மேகாலயா சட்டமன்றக் குழுவின் தலைவரான சாண்டா மேரி ஷைல்லா, இந்தச் சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு, காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளார். மேலும், மாநில மகளிர் ஆணையமும் இந்தச் சம்பவம் குறித்து தானாக முன்வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்க ஒரு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.