கரோனா தாக்கத்தால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் ஏழாவது பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சக்தி காந்த தாஸ், "கரோனா வைரஸால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் இதுவரையில்லாத வகையில் எதிர்மறையான பாதிப்பை கொடுத்துள்ளது, உலகளாவிய அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்து வருகிறது. இதுவரை 135 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதை கையாளவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் காரணமாக, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கியின் முதன்மையான முன்னுரிமை வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் வங்கி முறை, நிதிச்சூழல் முறை ஆகியவை தகுதியுடையதாக இருக்கிறது. கரோனா பாதிப்புக்குபின் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கவும், முதலீடுகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்'' என தெரிவித்தார்.