2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ல் டெல்லி, செங்கோட்டைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜபுத்திர ரைபிள் படையினரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கப் பயங்கரவாதி முகமது ஆரிப் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆரிப்பிற்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மற்றவர்களை விடுதலை செய்து ஆரிப்பின் தண்டனையை மட்டும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆரிப் மேல்முறையீடு செய்தார். கடந்த 2011-ல் ஆரிப்பின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், கீழ் கோர்ட்டின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பும் அளித்தது.
இதனையடுத்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகமது ஆரிப் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லலித் அமர்வு இவ்வழக்கை விசாரித்து, குற்றவாளி முகமது ஆரிப்பிற்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. ஆரிப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டது.