காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து ஹரியானாவில் இருந்து 1,200 கிமீ பயணித்து பீகாருக்குத் திரும்பிய 15 வயது சிறுமியின் படிப்பு செலவை ஏற்க ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி முன்வந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த மோகன் ஹரியானா மாநிலத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவருக்குச் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். உடல்நிலை குன்றியிருந்த தந்தையை அவருடைய மகள் ஜோதி பராமரித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அங்கே இருந்து சிரமப்படுவதைக் காட்டிலும் சொந்த ஊரான பீகாருக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்கள், சைக்கிளில் 1,200 கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்தச் செய்தி தற்போது இந்தியா முழுவதும் ஆச்சரியமாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜோதிக்கு சில தேர்வுகள் வைத்து சைக்கிளிங் பெடரேசனில் பயிற்சியாளராக மாறும் தகுதி உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சிறுமி ஜோதியின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.