கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்குத் தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பும் கட்டத்தை நோக்கி வருகிறது. 118 அடியை கடந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்கி வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலைக்குள் மேட்டூர் அணை முழுவதும் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுப்பதற்காகவே மேகதாது திட்டம் கொண்டு வரப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் சமர்ப்பண பூஜை இன்று நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தமிழ்நாட்டில் காவிரி நீரை வீணாவதை தடுப்பதற்கு மாற்று வழிதான் மேகதாது திட்டம். மேகதாது திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கு தான் அதிக பயனளிக்கும். அரசியல் காரணங்களுக்காக மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு குரல் கொடுக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி நீர் வீணாவதை தடுக்க தமிழ்நாட்டுடன் பேச தயாராக இருக்கிறோம். மேகதாது திட்டத்தால் தமிழ்நாடு கவலைப்படவில்லை என்றாலும் அவர்கள் பேச தயாராக இல்லை'' என்றார்.