இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, இந்தியாவில் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து விளக்கமளித்துள்ளது.
சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வைச் சுட்டிக்காட்டிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கரோனாவால் மரணமடைவதிலிருந்து 92 சதவீத பாதுகாப்பை அளிப்பதாகவும், இரண்டு டோஸ்களும் சேர்ந்து கரோனாவால் மரணமடைவதிலிருந்து 98 சதவீத பாதுகாப்பை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, "கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 1,000 பேரில் 3 சதவீதம் பேர் கரோனாவால் உயிரிழகின்றனர். கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டும் செலுத்திக்கொண்ட 1,000 பேரில் 0.25 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழகின்றனர். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட 1,000 பேரில் 0.05 சதவீதம் பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழக்கின்றனர்" என தெரிவித்துள்ள டாக்டர் வி.கே. பால், "கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்பைத் தடுப்பூசி கிட்டத்தட்ட நீக்கிவிடுகிறது என்பதைக் காட்டுகிறது. நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசி பாதுகாப்பானதா, செயல்திறன் கொண்டதா என எந்தக் கேள்வியும் இருக்க வேண்டியதில்லை" எனவும் கூறியுள்ளார்.