கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அயிரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரம்யா அதே கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனை காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ரம்யா வர்க்கலா பகுதியை சேர்ந்த இளைஞரை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் தனது காதலை கைவிட மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரம்யா தனது கல்லூரி காதலனுடன் சேர்ந்து அந்த இளைஞரை கூலிப்படையைக் கொண்டு தாக்கத் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து எர்ணாகுளத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு கூலிப்படையின் உதவியுடன் அந்த இளைஞரை அவரது வீட்டில் இருந்து வெளியே வர வைத்து காரில் கடத்தி உள்ளனர். மேலும், அவரை காரில் வைத்து அந்த கூலிப்படை சரமாரியாகத் தாக்கி உள்ளது. அவரிடம் இருந்த 2 பவுன் தங்க செயின், ஐபோன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை எர்ணாகுளத்திற்கு கடத்திச் சென்று அங்குள்ள வீட்டில் அடைத்து வைத்து ஆடையை களைந்து கூலிப்படையை சேர்ந்த கும்பல் தாக்கி உள்ளனர். கட்டாயப்படுத்தி கஞ்சா மற்றும் மதுவை அருந்த வைத்துள்ளனர். மேலும், மது பாட்டிலால் இளைஞரை தாக்கியுள்ளனர். அதனை அங்கிருந்த ரம்யா தனது செல்போனில் வீடியோ எடுத்ததுடன் 5 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு அடுத்த நாள் அந்த இளைஞரை சாலையில் விட்டுவிட்டு கூலிப்படையை சேர்ந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் இளைஞரை கடத்தி நிர்வாணப்படுத்தி தாக்கிய காட்சிகள் அப்பதியில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்த அந்த இளைஞரின் பெற்றோர் உடனே இளைஞரை சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவையும், கூலிப்படையை சேர்ந்த அமல் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.