நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒடிசா மாநிலத்தில் தற்போது உள்ள பரிதாப நிலைக்கு காங்கிரஸும், பி,ஜே,டி கட்சியும் தான் காரணம். நாட்டில் உள்ள ஏழை மக்களின் துயரங்களை நீக்கக்கூடிய முதல் பிரதமர் மோடி தான். கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வீடு, குடிநீர் குழாய் இணைப்பு, இலவச சமையல் எரிவாயு, இலவச உணவு தானியங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பலவற்றை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. பாஜக அளித்த வாக்குறுதி அளித்தப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் தன்னுடைய கோவிலுக்கு தற்போது வந்துள்ளதால் இனி இந்தியாவில் ராமராஜ்ஜியம் நிறுவப்படும்” என்றார்.
மேலும், உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேசி, இரு நாடுகளுக்கு இடையேயான போரை நான்கரை மணி நேரம் நிறுத்தினார். அப்போது 22,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போரில் இருந்து மீட்கப்பட்டனர் எனத் தெரிவித்தார்.