Published on 26/04/2019 | Edited on 26/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

அந்த வகையில் ஒடிசாவில் நேற்று நடந்த பிரச்சார கூஓட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டு அகற்றினால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடும். 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் வறுமையை ஒழிக்க எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி இப்போது வந்து ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் தருவதாக கூறுகிறார். மக்களின் வாக்குகளை பெறவே இவ்வாறு அவர் பேசுகிறார்" என கூறினார்.