குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தீவிரவாதிகள், மோடி தலைமையிலான அரசைக் கண்டு பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "பயங்கரவாதிகள் வெற்றிபெற நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஜம்மு - காஷ்மீரை விட்டுவிட்டு பார்த்தால், மோடிஜியின் வருகைக்குப் பிறகு நாட்டின் எந்தப் பகுதியிலும் பெரிய அளவிலான தீவிரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இது எங்கள் மிகப்பெரும் சாதனை. இது சாதாரண விஷயம் அல்ல. நமது அரசாங்கத்தின் மீதான பயம் பயங்கரவாதிகளின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "உரி தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், நம்மால் இந்திய எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதிகளையும் கொல்ல முடியும், தேவைப்பட்டால் எல்லை தாண்டியும் செல்ல முடியும் என்ற செய்தியை உலகத்திற்கு வழங்கியுள்ளது" என கூறியுள்ளார்.
மேலும், அயோத்தி இராமர் கோயில் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸை விமர்சித்த ராஜ்நாத் சிங், "பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட பாஜக மூன்று மாநில அரசுகளை தியாகம் செய்தது" எனவும் தெரிவித்துள்ளார்.