அமெரிக்க முதன்மை தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றது எனச் சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இது குறித்து எலான் மஸ்க், “மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்த கருத்துக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எலான் மஸ்க்கை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்திய இ.வி.எம் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அது துல்லியமாக மிகக் குறைந்த நுண்ணறிவு சாதனம். இது வாக்குகளை மட்டுமே எண்ணுகிறது. மேலும், எண்ணிக்கையை சேமிக்கிறது. அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் ஹேக் செய்ய முடியும் என்ற மஸ்க்கின் கூற்று தவறானது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு அதிநவீன இயந்திரம் அல்ல, அது ஹேக் செய்யப்படலாம் என்று எலோன் மஸ்க் நினைக்கிறார். ஆனால் அது உண்மையில் தவறு.
நான் எலான் மஸ்க் அல்ல. ஆனால், உலகில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு எதுவும் இருக்க முடியாது என்று கூறும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் எனக்கு ஒரு குறிப்பிட்ட புரிதல் உள்ளது. ஒவ்வொரு டெஸ்லா காரையும் ஹேக் செய்ய முடியும் என்று ஒருவர் கூறுவது போலத்தான் இது இருக்கிறது” என்று தெரிவித்தார்.