பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் வேளாண்சட்ட எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 'வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா', 'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா', 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா' ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும், இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது பஞ்சாப் அரசு. இதற்காகக் கூட்டப்பட்ட அம்மாநிலச் சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் வேளாண்சட்ட எதிர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "சோனியா காந்தி, ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி, நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்காக முழுமையாகத் துணை நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும். இன்று பஞ்சாப் காங்கிரஸ் அரசு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது, அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.