ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் கவலையளிக்கின்றன. இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாக பாலாஜி இருக்கிறார். இந்த பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள், நமது மத தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.