கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் 5- ஆம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதில், அக்டோபர் 15- ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம். பள்ளிகளைத் திறப்பது குறித்த இறுதி முடிவுகளை, அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தது. மேலும் பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசின் அனுமதியை அடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று (08/10/2020) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10, 12- ஆம் வகுப்புக்கு மூன்று நாட்களும், 9, 11- ஆம் வகுப்புக்கு மூன்று நாட்களும் என வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்கும். காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது. பாட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்த புதுச்சேரி அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.