Skip to main content

சபரிமலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன..?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற நிலை பல்லாண்டு காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. 4 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.


சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும் கூட, இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் 56 மறு ஆய்வு மனுக்கள், 4 ரிட் மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம்  கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந் தேதி பதவி ஓய்வு பெறுகிற நிலையில்,  சபரிமலை வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்