புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட பரிசீலிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இடஒதுகீட்டு முறையை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ரங்கசாமி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நாராயணசாமி தலைமையிலான அரசு இதே போன்று அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை அப்போதைய ஆளுநர் நிராகரித்து இருந்தார். இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.