இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள், இந்தியாவிற்கு ஆக்சிஜனையும், ஆக்சிஜன் தயாரிக்கும் உபகரணங்களையும் வழங்கி வருகின்றன.
அதேநேரத்தில் கேரளா, கூடுதல் ஆக்சிஜன் இருப்பை ஏற்படுத்தியதுடன், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் விநியோகித்து வந்தது. இந்தநிலையில் கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால், தங்களால் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தரமுடியாது எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு ஆக்சிஜன் விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் தனது கடிதத்தில், அண்டை மாநிலங்களுக்கு, நாங்கள் கூடுதல் இருப்பாக வைத்திருந்த ஆக்சிஜனையும் விநியோகித்து விட்டோம். தற்போது கூடுதல் இருப்பாக 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. எனவே இனி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "ஏற்கனவே முடிவெடுத்தபடி தமிழ்நாட்டிற்கு மே 10 ஆம் தேதி வரை 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்படும். அதன்பிறகு, மாநிலத்தின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது, இங்கு இருந்து ஆக்சிஜனை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க இயலாது" எனக் கூறியுள்ளார்.
கேரளாவில் உற்பத்தியாகும் மொத்த ஆக்சிஜனையும் கேரளாவிற்கே ஒதுக்கும்படியும், இரும்பு ஆலைகளில் இருந்து கூடுதலாக கேரளாவிற்கு ஆக்சிஜனை ஒதுக்கவேண்டும் என்றும் கோரியுள்ள பினராயி விஜயன், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்குமாறு கூடுதல் கிரையோஜெனிக் டேங்கர்களை ஒதுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.