Skip to main content

'இந்த ஆட்சி குறைப் பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும்' - நாராயணசாமி பேச்சு

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
 puducherry former cm Narayanasamy speech

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

நாளை பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று சொன்னவர் இப்பொழுது 240 இடங்களுக்கு பாஜக வந்த பிறகு, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். இந்த ஆட்சி குறைப் பிரசவமாகத்தான் இருக்கும். ஐந்து ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெறாது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் அனுபவம் மிக்க அரசியல்வாதிகள். நரேந்திர மோடியினுடைய சர்வாதிகாரப் போக்கிற்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. ஆகவே இந்த ஆட்சி வெகு விரைவில் கலைந்து விடும். நரேந்திர மோடியைக் கூட்டணிக் கட்சிகளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்