நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.
இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.