
புதுச்சேரியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிப்பு செய்து நிவாரணப் பணியை முடுக்கிவிட வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி – மரக்காணம் இடையில் கரையை கடந்த ஃபெங்கல் புயலால் புதுச்சேரி மாநில வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. சுமார் 49 செ.மீ அளவுள்ள மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்து அனைத்து பகுதியையும் நாசமாக்கி இருக்கிறது. புதுச்சேரி நகரின் இதயப்பகுதியான புல்வார் தொடங்கி அனைத்து குடியிருப்புகளும் நீரில் மிதந்து மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி உள்ளது.
புதுச்சேரி அரசு ஏதோ சாதாரண மழைக்கான ஒரு திட்டமிடல் கூட்டத்தோடு தனது முன்னேற்பாட்டை நிறுத்திக் கொண்டது வேதனையான ஒன்று. மழைநீரை வெளியேற்றவும், மரங்களை அப்புறப்படுத்தவும், மக்களை வீடுகளில் இருந்து முகாம்களுக்கு கொண்டுவரவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் பணியை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த முன்னேற்பாட்டையும் செய்யாமல் அரசு நிர்வாகம் மெத்தனமாக இருந்ததின் விளைவு பொதுமக்கள் இப்படிப்பட்ட மிகப்பெரிய இழப்பினை சந்திக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
புயல் கரையை கடந்தும், மழை விட்டும் கூட புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் இருக்கிறது. பல இடங்களில் உள்ள வீதிகளி்ல அடித்துவரப்பட்ட மண் குவியலும், சேரும், சகதியும் தேங்கி மக்கள் நடமாடுவதற்கே வழியில்லாமல் உள்ளது. நாவற்குளம் பகுதியில் இருந்து வந்த செம்மன் நகர் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அனைத்து வீடுகளின் குடிநீர் தொட்டிகள் எல்லாம் செம்மன் இணைந்த கழிவுநீர் கலந்துள்ளது. ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சேற்று நீராமல் நிரம்பி இருக்கின்றன. கிராமங்களில் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. இதனிடையே வீடூர் அணை, சாத்தனூர் அணை ஆகியன நிரம்பி திறந்து விடப்படுவதால் புதுச்சேரியில் உள்ள ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் பயிர்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்துவது தொடர்கிறது.
வீடற்ற மக்களுக்கு சரியான உணவு வழங்க இந்த அரசு தவறிவிட்டது. ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் கடந்த காலத்தில் செய்ததுபோல் உணவு தயார் செய்து கொடுத்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைத்திருக்கும். ஆனால் அரசு பள்ளி மாணவர்களை கெடுத்ததுபோல், பொதுமக்களையும் பட்டினிப்போட அட்சயப்பாத்திராவை இந்த அரசு நம்பியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. நீர் இறைக்கும் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் என எதுவும் தயார் நிலையில் இல்லை. ரப்பர் போட் கூட கடைசி நேரத்தில் தான் இறக்கப்பட்டது. இத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் அவர்களை பகுதிவாரியாக அமைச்சர்களோடு இணைத்து பொறுப்பு அளித்திருந்தால் ஓரளவிற்கு பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கலாம். நல்ல நேரம் மழை தொடரவில்லை. நேற்றிரவு மழை தொடர்ந்து இருந்தால் மிக மோசமான விளைவுகளை புதுச்சேரி சந்தித்திருக்கும்.
தற்போதைய உடனடி தேவை என்பது நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும். சாலைகளில் அடைத்து கிடக்கும் மரங்கள், குப்பைகள், மண் குவியல்கள், சேறு, சகதிகளை உடனடியாக அகற்றிட வேண்டும். சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகள் தோறும் புகுந்து அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு மருத்துவ முன்னேற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும். மருத்துவ குழுக்களை ஏற்படுத்தியும், முகாம்களை உருவாக்கியும், பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளை திறந்து தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்று ரூ. 20 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு பாதிப்பிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்குவதோடு, உயிரிழிந்த மாடுகளுக்கு ரூ. 50 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். பழுதுபட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் இவைகளுக்கு பழுதுபார்க்கும் முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவிப்பு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் மழைநீர் முறையாக வெளியேறும் விதத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமின்றி இடித்து அப்புறப்படுத்தி கால்வாய்களை செம்மைப்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை இவ்வரசு உணர வேண்டும்.
புதுச்சேரி அரசு இந்த பாதிப்பை பேரிடர் பாதிப்பாக அறிவிப்பு செய்து. பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்வதற்கு ஒன்றிய குழுவை புதுச்சேரிக்கு வரவழைத்து, உரிய இழப்பீட்டை பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.