புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 05- ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து புதுச்சேரியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் உறுதியானது. அதன் பிறகு 08- ஆம் தேதி புதுச்சேரி அரசு மருத்துவமனை சிகிச்சையிலிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த முதியவர் இறந்த நிலையில், மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது.
அதேபோல் புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 82 வயது முதியவர் பல்வேறு நோய் காரணமாக அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனால் கரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (10/06/2020) மாலை அவர் உயிரிழந்தார். கரோனாவுக்கு பலியான முதல் புதுச்சேரிவாசி இவரே.
புதுச்சேரியில் 88 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 40 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 42 பேரும், வெளி நோயாளிகளாக 2 பேரும், மாஹேவில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 8,954 பேரின் இரத்தம், சளி மற்றும் உமிழ்நீர்ப் பரிசோதனை செய்ததில் 157 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 8,712 பேருக்கு கரோனா இல்லை. 86 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு வீடியோ நேர்காணல் மூலம் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், “புதுச்சேரி மாநிலத்தில் இன்று (11/06/2020) புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேர், மாஹேவைச் சேர்ந்த இருவர் என புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 157 கரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 88 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் புதுச்சேரியில் 10- க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுவதால் ஜூலை மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.