புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- "புதுச்சேரியில் 4 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்ற்னர். மேலும் 2,167 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாரத பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேசினார். கரோனா தொற்று நோய் 20 வளர்ந்த நாடுகளில் அதிகளவு பரவியுள்ளது. நம் நாட்டில் 1 சதவீதம் பரவி உள்ளதாகத் தெரிவித்தார். உலகளவில் இறப்பு சதவீதம் 25 % இருக்கின்ற நிலையில் இந்திய அளவில் அது 1 சதவீதமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம் நான்கு பகுதிகளைக் கொண்டது. புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளில் தொற்று இல்லை. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாகப் புதுச்சேரியில் தொற்று அதிகளவில் பரவவில்லை.
கரோனா தொற்று கண்டறிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான உடை, மருந்துகள், முகக்கவசங்கள் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தேன். மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள் நிதி உதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என மாநில அரசின் நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய 4 மாதத்திற்கான 360 கோடி வழங்க வேண்டும். ஏழாவது சம்பள கமிஷன் செயல்படுத்தியதால் 2,200 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். வரும் காலங்களில் மாநில அரசின் வருவாய் பெரும்பாலும் குறையும் என்று தெரிவித்திருந்தேன். புதுச்சேரி ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.
புதுச்சேரியைச் சார்ந்த மாணவர்கள் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் படிக்கிறார்கள். அவர்களைப் புதுச்சேரிக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களைத் திரும்பி அனுப்பவும் கோரிக்கை வைத்துள்ளேன்.
மத்திய அரசு வரும் 3- ஆம் தேதிக்குப் பிறகு என்ன முடிவெடுத்தாலும் மக்களுக்குப் பாதிப்பில்லாமல் எடுக்க வேண்டும். விவசாயிகள் கமிட்டியில் விற்கப்படும் விதைகளுக்கு 25 சதவீத மானியத்தை 50 சதவீதம் வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அங்குள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை மத்திய அரசே வழங்க வேண்டும். போர்க்கால நடவடிக்கையாக கரோனா சோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.
உடனடியாக மத்திய அரசிடம் நான் கோரிய ரூ.995 கோடியை வழங்க வேண்டி கோரிக்கை வைத்தேன். மேலும் மத்திய அரசு கரோனாவை ஒழிக்க நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.