தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதுச்சேரி மாநில தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது புதுச்சேரி நிலவரம் குறித்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, "ஊரடங்கு உத்தரவை முன்னதாகவே பிறப்பித்த முதலமைச்சர் நாராயணசாமி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்தியதன் காரணமாக கரோனா நோய்த் தொற்று புதுச்சேரியில் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களை அலைக்கழிக்காமல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.
2000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலவச அரிசி, இலவச பருப்பு ஆகியவற்றை வழங்க அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றவர், புதுச்சேரி அரசின் செயல்பாடு வேகமாக இருந்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். கரோனாவை விட கொடுமையானவர் கிரண்பேடி. அதனையும் மீறி முதலமைச்சர் நாராயணசாமி வேகமாகச் செயல்படுகிறார்" என்றார்.
இவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்தார். முதல்வரும், அமைச்சர்களும் தீவிரமாகச் செயல்பட்டு நோய்க் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தவர் தி.மு.க தொண்டர்கள் தொடர்ந்து மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவா எம்.எல்.ஏ, "அவசர காலத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்குத் திரும்பத் தயாராக இருக்கும் சூழ்நிலையில் தனியார் மூலம் அரிசியைப் பாக்கெட் போட்டு கொடுப்பது ஏன்? அரிசியைப் பாக்கெட் போட 5 கோடி ரூபாய் செலவிடுவது கண்டிக்கத்தக்கது. அரிசி விநியோகத்தில் நடக்கும் குளறுபடிகள் குறித்து முதல்வர், அமைச்சர்களிடம் கூறியும் கண்டு கொள்வதில்லை. அரசுக்கு ஆதரவு அளித்தாலும் தவற்றைச் சுட்டிக்காட்ட திமுக தயங்காது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் கிரண்பேடி தடுக்கிறார். சுய மரியாதை இழந்து இந்த ஆட்சி தேவையா...? ஆளுநரால் தடை எனக் கூறுவதை விட அனைவரும் டெல்லி சென்று ராஜினாமா செய்து குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்" என்றார்.