பிரபல மொபைல் கேம் 'பப்ஜி' இன்று முதல் இந்தியாவில் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பப்ஜி நிறுவனமானது தென்கொரிய நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான பப்ஜி மொபைல் விளையாட்டுச் செயலி, உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. உலகின் இரண்டாவது பெரிய நாட்டில் விதிக்கப்பட்ட இந்தத் தடையானது அந்நிறுவனத்திற்கு கணிசமான வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பப்ஜி நிறுவனம் அந்தத் தடையை இந்தியாவில் விலக்கும் பொருட்டு டென்சென்ட் நிறுவனத்துடனான உறவை முறித்தது. இருப்பினும் தடை நீக்கப்படாத சூழலில், ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் இதுவும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பப்ஜி வெளியிட்டுள்ள பதிவில், "டென்சென்டுடனான எங்கள் உறவை முடித்துக் கொள்வதன்மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை நிலைப்படுத்த விரும்பினோம். பயனர்களின் தரவுக்குப் பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். ஆனால், எங்கள் தனியுரிமைக் கொள்கைப்படி அனைத்துப் பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளது.